பிரச்சார பீரங்கி

நாற்காலிக் கனவுகள்
டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்
Published on

ஒரு சாதாரணன், ஒரே ராத்திரிக்குள் பிரபலம் ஆகிவிடுகிற சூட்சுமம் சினிமாவில்  மட்டுமே உண்டு.

80 களில் வெளிவந்த ‘ஒருதலை ராகம்' படத்தின் இயக்குநர் டி.ராஜேந்தர்தான் என்றாலும், டைட்டிலில் அவர் பெயர் இருக்காது. தயாரிப்பாளரான இப்ராஹிம் என்பவரது பெயரே இடம் பெற்றிருந்ததால், டி.ஆர். பிரபலம் ஆவதற்கு சில ராத்திரிகளும், சில பல ஷோக்களும் ஆனது. இருந்தாலும், பத்திரிகைகளும், மக்களும் டி.ஆரை அடையாளம் கண்டு கொண்டார்கள். 

ஒருதலைராகம் ஒரு வருடம் தியேட்டர்களில் ஓடியது. அதற்கப்புறம் வந்த இரயில் பயணங்களில், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், மைதிலி என்னைக் காதலி, என தொடர்ச்சியாக ஆறேழு சில்வர் ஜூப்ளி படங்களை அள்ளிக் கொடுத்தார் ராஜேந்தர். அப்புறம் 1984&ல் வெளியான உறவை காத்த கிளி என்ற படம்தான், அவருக்கும் அரசியலுக்குமான உறவை ஆரம்பித்து வைத்தது. 

ஒரு பாடல் காட்சிக்கு இரண்டு லாரி பூக்கள் வேண்டும் என்று டி.ஆர். கேட்க, முடியாது என்று தயாரிப்பாளர் மறுக்க... ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து கோபித்துக்கொண்டு பறந்துவிட்டார் ராஜேந்தர். அப்படத்தின் தயாரிப்பாளர், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர். இதனால்  தற்காப்புக்காகக் கலைஞரைத் தேடிப் போனார் டி.ஆர். என்று சொல்லப்படுகிறது. ஆனால் தி.மு.க.வில் அவருக்கு மிகுந்த வரவேற்பு.

டி.ஆரின் அரசியல் சாதனை என்றால் தி.மு.க.வுக்காக அவர் நடத்திய தேர்தல் பிரச் சார சூறாவளி சுற்றுப்பயணம்தான். 1984 தேர்தலில் கோவை மாவட்டத்தில் நெகமம் பகுதியில் அ.தி.மு.க.வை எதிர்த்து அவர் பேசிய பிரச்சார கூட்டத்தில் கலவரமே ஏற்பட்டதை தி.மு.க.வினர் நினைவுகூர்கிறார்கள். டி.ஆர். இசையமைத்துக் கொடுத்த பிரச்சாரப் பாடல்கள், சினிமா பாடல்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரபலம் ஆயின.

நன்றாக போய்க்கொண்டிருந்த அரசியல் பயணம்  சில பல உள் விஷயங்களால் கெட்டு, தி.மு.க விலிருந்து வெளியேற்றப்பட்டார் டி.ஆர். அதைத் தொடர்ந்து தி.மு.க.விலிருந்து பிரிந்து தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். 1991 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டார். தோல்விதான் பரிசு என்றாலும்,  சுமார் முப்பதாயிரம் வாக்குகளை பெற்று  இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தேர்தலுக்குச் சில தினங்கள் முன்பு தி.மு.க தன் வேட்பாளர் சுகவனத்தை ஒதுங்கச் சொல்லி டி.ஆருக்கு உதவியது.

1993 ல் தி.மு.க விலிருந்து நீக்கப்பட்டார் வைகோ. இதைத் தொடர்ந்து வைகோ அளவுக்கு கூட்டம் சேர்க்கக்கூடிய ஒரு ஸ்டார் தேவைப்பட்டது கட்சிக்கு.  அப்போது மீண்டும் தங்கள் ‘கம்பெனி ஆர்ட்டிஸ்ட்' டி.ஆர். நினைவு தி.மு.க.வுக்கு வந்தது.

அப்போது தினந்தோறும் டி.ஆர். வீட்டுக்கு வருவார் ஆற்காடு வீராசாமி. மணிக்கணக்கில் சந்திப்புகள் நடக்கும். வேறொன்றுமில்லை. ‘தாயக மறுமலர்ச்சி கழகத்தை கலைத்துவிட்டு, தி.மு.க.வில் சேருங்க' என்பதுதான் அந்தச் சந்திப்பின் சாரம்சம். அவர் கிளம்பிப் போன கொஞ்ச நேரத்தில், பிரபல தயாரிப்பாளர் தாணு வருவார். அப்போது தாணுவும் வைகோவும் நெருங்கிய நட்பில் இருந்தார்கள். ‘நீங்க தி.மு.க.வுக்கு போகக்கூடாது' என்பதுதான் தாணுவின் கோரிக்கையாக இருக்கும். பின்னர்  சில பல சமரசங்களுக்குப் பின் தி.மு.க.வில் இணைந்தார்.

1996 தேர்தலில் பூங்காநகர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக களம் இறங்கிய டி.ஆர். வெற்றி பெற்றார். கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற பதவியும் அவர் பெற்றிருந்தார். அந்தத் தேர்தலில் அவரும் நட்சத்திரப் பிரச்சாரகராக தி.மு.க.வுக்கு உழைத்தவர். இதற்கடுத்து 2001 தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புப் பெற்றாலும் தோற்றுப்போனார். கொ.ப.செ என்ற பதவிக்குத் தக்க அவர் நடந்துகொள்ளவில்லை என்ற அதிருப்தியால் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்ற காரணம் சொல்லி கட்சியை விட்டு நீக்கப்பட்டார் அவர்.

இதனால் நடுவில் புதுப்பிக்கப்பட்ட சுமார் எட்டு வருட தி.மு.க விசுவாசத்தை பஸ்பமாக்கிவிட்டு, மீண்டும் தனிக்கட்சி என்ற வழிக்குத் திரும்பினார். 2004 ல் அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கினார். தனித்துப்போட்டி, கூட்டணி அமைத்துப் போட்டி, போர் முழக்கம், புதுப்பாட்டு எல்லாம் போட்டும் ஒரு இஞ்ச் கூட முன்னேறவில்லை கட்சி. ஆனால் 2006 சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பிரச்சாரத்துக்கு ஆள் தேவைப்பட்டது. மீண்டும் டி.ஆர். தி.மு.க. கூட்டணி மேடைகளில் தோன்றி வழக்கமான பாணியில் பொளந்து கட்டினார். தி.மு.க வென்று அரியணையில் அமர்ந்ததும் டி.ஆருக்கு பிரசாரத்துக்குப் பரிசாக சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 2008&ல் ஈழத்தமிழர் பிரச்னையைக் காரணம் காட்டி அந்தப் பதவியையும் ராஜினா செய்துவிட்டு தி.மு.க கூட்டணியிலிருந்து ஒதுங்கினார் டி.ஆர்.

‘நான் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, நடிப்பு என்று எல்லாவற்றையும் ஒற்றை ஆளாக நின்று சாதித்தவன். மூன்று முதல்வர்களை எதிர்த்தவன். எனக்கும் இங்கிலீஷ் பேசத் தெரியும். நான் ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளன்'. இப்படி ஒரே குரல். ஒரே விஷயங்களை அடிக்கடி கூறுவார். அவருக்கு இருந்த பிரச்சார வல்லமை, கூட்டம் கூட்டுகிற திறன் ஆகியவை அவரது கட்சியை வளர்க்க முடியாமல் போய்விட்டதற்கு அவர் தன் சினிமா பாணியையே கட்சியிலும் காட்டியதைக் காரணமாகச் சொல்லலாம். தன்னை மட்டுமே நம்பி ஒரு சினிமாவை தருகிற வல்லமை டி.ஆருக்கு இருந்தது. தன்னை மட்டுமே நம்பி கட்சியை நடத்தமுடியாதே... 

இன்றும் அவர் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். கடந்த மாதம்கூட  கட்சியின் புதிய பெயர் பலகையை அறிமுகம் செய்தார். அதில் பெரியார், அண்ணா படங்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெற்று இருந்தன. 2014 நாடாளுமன்றத்  தேர்தலுக்கு முன்பாக கடைசியாக ஒரு முறை தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டவர் டி.ஆர்.  வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மீண்டும் பிரச்சார பீரங்கியாக முழங்க முன்வந்தாலும் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது! தேர்தல்களின்போது பிரச்சாரம் செய்வதற்காகவே தன்னை நேர்ந்துகொண்டவர் டி.ஆர்!

துக்ளக் இதழில் கேள்வி பதில் பகுதி! ‘நான் மூன்று முதல்வர்களை எதிர்த்தவன்' என்று டி.ராஜேந்தர் அடிக்கடி முழங்குகிறாரே? இதுதான் கேள்வி. சோ சொன்ன பதில்: ‘வீரப்ப கவுண்டர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு வேலையே இந்தியா முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதுதான். வி.ஐ.பி தொகுதிகளாகப் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வார். இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, அத்வானி என்று யார் தொகுதியையும் விட்டதில்லை. டி.ஆரும் ஒரு வீரப்ப கவுண்டர்தான்!' இது கிண்டலா, அதை தாண்டிய உண்மையா? என்பதை இன்று வரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஏப்ரல், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com